
UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் சேவைக் கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைப் புதுடெல்லியில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, பேராசிரியர் ஆர். ராஜ்குமார் உள்ளிட்டோரும் உடனிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு UPI பணப்பரிவர்த்தனைகளில் 0.4 சதவீத சேவைக் கட்டணத்தை விதிக்கப் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்து, இதற்கு வணிகர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் பொதுமக்களிடமும் வணிகர்களிடமும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், கூடுதல் சேவைக் கட்டணம் விதிக்கப்பட்டால் சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்கள் பாதிக்கப்படக்கூடும் என வணிகர் சங்கப் பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, UPI பணப்பரிவர்த்தனைகளுக்கான சேவைக் கட்டணத்தைத் திரும்பப் பெறுவதுடன், வணிகர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், UPI பரிவர்த்தனைக் கட்டண விவகாரத்தில் வணிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நல்லதொரு முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
