
சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டியில் சென்னைஸ் அமிர்தா மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்கள் வென்ற வரலாற்றுச் சாதனையை கௌரவிக்கும் வகையில் 15 லட்சம் ரொக்கப் பரிசினை சென்னைஸ் அமிர்தாவின் தலைவர் ஆர்.பூமிநாதன் வழங்கினார்.
உலக சமையல் கலை வல்லுனர்கள் சங்கத்தின் சார்பில் இந்தியாவில் முதல்முறையாக இப்போட்டி நடைபெற்றது.*
தென்னிந்திய சமையல் கலை வல்லுனர்கள் சங்கம் (SICA) சென்னையில் நடத்திய இப்போட்டியில், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், இலங்கை போன்ற பல நாடுகளைச் சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட பிரபல சமையல் கலை வல்லுனர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
சென்னைஸ் அமிர்தா மாணவர்கள் இவர்களோடு போட்டியிட்டு, சர்வதேச நடுவர்களின் பாராட்டுகளைப் பெற்று, 26 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.
சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியில், இந்த சாதனை புரிந்த மாணவர்களை கெளரவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வில், தங்கம் வென்ற மாணவர்கள் தங்கள் வெற்றி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், ‘கார்விங்’ பயிற்சியாளர்கள் கரவொலிக்கு மத்தியில் கௌரவிக்கப்பட்டனர்.
பயிற்சியாளர் ‘செப்’ கார்த்திக்கிற்கு ஒரு லட்சம் ரூபாயும், பயிற்சியாளர் செந்திலுக்கு இருபது ஆயிரம் ரூபாயும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. பயிற்சியாளர்களும், தங்கம் வென்ற அனைத்து மாணவர்களும் ரொக்கப் பரிசுகளால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் இன்னொரு மைல்கல் சாதனையை நிகழ்த்திய மாணவி திருமதி.கீர்த்தனாவை சென்னைஸ் அமிர்தாவின் தலைவர் ஆர்.பூமிநாதன் வெகுவாகப் பாராட்டி, ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவித்தார். மாணவி கீர்த்தனா அழகப்பா பல்கலைக்கழகத்திலேயே முதல் இடத்தைப் பிடித்த சாதனை மாணவி ஆவார்.
தலைவர் ஆர்.பூமிநாதன் கூறுகையில், இச்சாதனைகளுக்குக் கல்லூரியில் உள்ள பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், ஊழியர்கள், நிர்வாகப்பணியாளர்கள் என அனைவரின் கூட்டுமுயற்சிதான் காரணம். தற்போதைய சாதனைக்காக மொத்தமாக 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசினை வழங்கியதற்காக சென்னைஸ் அமிர்தா பெருமை கொள்வதாகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
