
நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது…
“முதலில் அட்லி சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் எனக்கு மிகவும் நெருக்கமான உறவு இருக்கிறது. இந்தப் படத்தை தயாரிக்க அவர் முன்வந்தது மட்டுமல்லாமல், கதை கேட்ட உடனேயே ‘இந்தப் படம் உலக விழாக்களிலும், திரையரங்குகளிலும் பெரிய அளவில் பேசப்படும்’ என்று அவர் சொன்ன வார்த்தை எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. முராத் சார், அஜித் சார் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. பாலாஜி தரணீதரனை எனக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாகத் தெரியும். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘ஒரு பக்கக் கதை’, ‘சீதக்காதி’ உள்ளிட்ட அவருடைய படங்களைப் பாருங்கள். இத்தனை ஆண்டுகளாக ஒரு மனிதர் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பையும் மரியாதையையும் இழக்காமல் இருப்பது பெரிய விஷயம். யாராவது தன்னைப் பாதித்திருந்தாலும் அவர்களைப் பற்றி தவறாகப் பேசாத ஒரு நல்ல மனிதர். அவருக்கு இரண்டு முகங்கள் கிடையாது. அவர் ஒரு அழகான மனிதர். பாலாஜி மாதிரியான ஒருவரால்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அவரைப் போன்ற ஒரு நெருக்கமான நண்பர் எனக்கு இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.”
“லிஜோமோல் இந்தப் படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பில் அவருடைய நடிப்பை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் திரையில் பார்த்தபோது, நாங்கள் கணவன்-மனைவியாக வாழும் அந்த வாழ்க்கை, வீடு, குழந்தை என அந்த உலகத்துக்குள் அவர் முழுமையாகச் சென்றிருந்தது தெரிந்தது. வீட்டில் இருக்கும் ஒருவரைப் போல அந்த இடத்தையும், பொருட்களையும் அவர் பயன்படுத்திய விதம் மிகவும் இயல்பாக இருந்தது. அதை எப்படி அவர் செய்தார் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. லிஜோ, உங்கள் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதேபோல் சாய் அபயங்கர் இந்தப் படத்தில் மிக முக்கியமான பங்கு வகித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அவர் வேறொரு உயரத்துக்கு சென்றிருக்கிறார். அவருடைய இசை இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம். அதே போல் அந்த சின்னப்பையன் ஆவன், கலக்கியிருக்கிறான். சகஸ்ரா இந்தக் கதையைத் தாங்கிச் செல்லும் மிக முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறார். ஆறு, எட்டு மாதங்களுக்கு முன்பு பார்த்த அந்தக் குழந்தை இப்போது எவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்று நடித்திருக்கிறது என்பதைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறான்.”
“இந்தப் படம் எப்படிப்பட்டதாக இருக்கும், என்ன மாதிரியான கதையாக இருக்கும் என்று உங்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கலாம். ஒரு பக்கம் விருதுகளைப் பெறும் படம், இன்னொரு பக்கம் மிகப்பெரிய வசூலைப் பெறும் படம் என்று இரண்டையும் எப்படி ஒரே படத்தில் சாத்தியப்படுத்த முடியும் என்ற கேள்வியும் இருக்கலாம். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘பத்தா’ பதில் சொல்லும் என்று நான் நம்புகிறேன். ஒரு வீரனும், ஒரு அறிவாளியும் சந்தித்தால் அவர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால் ஒரு வீரனோ, அறிவாளியோ ஒரு அப்பாவியான மனிதனைச் சந்திக்கும்போது நடக்கும் மாயம் வேறொரு விதமானது. அந்த அப்பாவித்தனத்துக்குள் இருக்கும் அறிவை எவ்வளவு பெரிய சக்தியாலும் வெல்ல முடியாது. அந்த உணர்வுதான் இந்தப் படத்தின் அடிப்படையில் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். விஷ்ணு, பாலா, ஹரிஷ், அர்ஜுன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில் வரும் ஒவ்வொருவரையும் நீங்கள் ரசிப்பீர்கள்.
படத்தைப் பார்த்து முடித்த பிறகு சபரி எனக்கு தொலைபேசியில் அழைத்து, இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னார். அந்த அளவுக்கு ஒருவர் நம்முடைய படத்தை நம்புகிறார் என்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் படம் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்று நானும் முழுமையாக நம்புகிறேன். செல்வா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், பாடலாசிரியர்கள், படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றி. யாருடைய பெயரையாவது சொல்லத் தவறியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். எல்லாரையும் திரையரங்கில் சந்திப்போம். இந்தப் படம் உங்களை நிச்சயம் மகிழ்விக்கும். நன்றி. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.”
இயக்குநர் அட்லீ பேசியதாவது…
“முதலில் இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த அனைவரிடமும் மன்னிப்பும் நன்றியும் கேட்டுக்கொள்கிறேன். ‘பத்தா’ எனக்கு ஒரு படம் மட்டுமல்ல. காலம் கடந்தும் நம்மை யோசிக்க வைக்கும் சில படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அப்பாக்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் மனிதநேயத்தோடு ஒரு நல்ல மனிதராக எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் சொல்லும். அதே நேரத்தில் இது முற்றிலும் ஒரு புதிய விதமான மாஸ் பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். இந்தப் படத்தை தயாரித்து, அஜித் சார் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வழங்கியிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. முராத் கெதானி சார் எனக்கு குடும்பத்தில் ஒருவரைப் போன்றவர். அவருக்கும் ஜியோ ஸ்டுடியோஸ் குழுவினருக்கும் நன்றி.”
“பாலாஜி தரணீதரன் போன்ற இயக்குநரை உலக சினிமாவிலேயே தேடினாலும் கண்டுபிடிப்பது கடினம். நம்ம ஊரில் இருக்கும் திறமைகளை நாமே கொண்டாடாமல், வெளியுலகத்தை மட்டுமே பெரிதாகப் பார்க்கிறோம். ஆனால் பாலாஜி போன்ற இயக்குநர்கள் நம்முடைய சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. சாய் அபயங்கரை முதன்முதலில் சந்தித்தபோது அவர் மிகவும் இளம் வயதில் இருந்தார். ஒரு நாளைக்கு ஒரு பாடலை உருவாக்கிவிட்டு அதனுடன் தூங்குவேன் என்று சொன்னார். அவரிடம் இருந்த அந்த ஆர்வத்தைப் பார்த்துதான் அவருடன் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன், அனிருத் என ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு தனித்துவமான இசையமைப்பாளர் இருப்பதைப் போல, சாய் அபயங்கருக்கும் தனியான ஒரு காலகட்டம் உருவாகும் என்று நான் நம்புகிறேன். சாய், உன்னிடம் இருக்கும் பணிவை எப்போதும் காப்பாற்றிக்கொள். நீ மிகப்பெரிய உயரத்துக்குச் செல்ல வேண்டும்.”
“லிஜோமோல் ஒரு அற்புதமான நடிகை. அவரை இந்தப் படத்தில் பார்த்தபோது, இவ்வளவு திறமையான நடிகையை நாம் இதற்கு முன்பு பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்ற உணர்வு வந்தது. நீ ஒரு மிகச்சிறந்த நடிகை. உனக்கு இன்னும் மிகப்பெரிய வாய்ப்புகள் வர வேண்டும். கலையும் செல்வாவும் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். கலை மீது எனக்கு எப்போதுமே மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. செல்வா என் குறும்பட காலத்திலிருந்தே என்னுடன் பயணித்தவர். நம்முடன் இருப்பவர்களை நன்றாகப் பார்த்துக்கொண்டால், நம்மையும் வாழ்க்கை நன்றாகப் பார்த்துக்கொள்ளும் என்று என் அம்மா சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்த நம்பிக்கையில் நான் தேர்ந்தெடுத்தவர்களில் செல்வாவும் ஒருவர். முத்துராஜ் அண்ணா, கார்த்திக் நேதா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.”
“அர்ஜுன் சிதம்பரம், இந்தப் படத்தில் நீங்கள் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறீர்கள். உங்களுக்குள் இருக்கும் திறமையை இந்தத் துறை இன்னும் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்று நான் நினைக்கிறேன். இன்னும் பெரிய விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும். ஹரிஷ், உங்களுடைய நடிப்பையும் நான் மிகவும் ரசித்திருக்கிறேன். ‘பத்தா’ மூலம் என்னுடைய அப்பாவைத் திரையில் பார்த்தது போன்ற ஒரு உணர்வு எனக்கு கிடைத்தது. காலத்துக்கும் உங்களை நான் நினைவில் வைத்திருப்பேன். அனைவரும் இந்தப் படத்தில் மிகச்சிறப்பாக உழைத்திருக்கிறீர்கள். ‘பத்தா’ ஒரு சிறப்பான பொழுதுபோக்கு படமாக இருக்கும். தயவுசெய்து திரையரங்குகளில் சென்று பாருங்கள். படத்தின் இறுதியில் உங்களுக்குள் ஒரு உணர்வை விட்டுச் செல்லும். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, ‘பாலாஜி அண்ணா அடுத்ததாக எப்போது இப்படியொரு படத்தைக் கொடுப்பார்?’ என்று நீங்கள் கேட்கும் அளவுக்கு படம் இருக்கும் என்று நம்புகிறேன்..”
“நான் இன்று இந்த அளவுக்கு வளர்ந்து, இந்த மேடையில் நிற்பதற்கு விஜய் அண்ணாதான் மிக முக்கியமான காரணம். இதை நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். அவர் இப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கிறார்; இனிமேல் எனக்கு இன்னொரு படம் கொடுக்க முடியாது. ஆனால் நான் இன்று இருக்கும் இந்த நிலைக்கு வருவதற்கும், என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய வாய்ப்புகளைத் தொடர்ந்து கொடுத்து என்னை வளர்த்ததற்கும் அவர் முக்கிய காரணம் என்பதை என்னால் மறுக்கவே முடியாது. சமூக வலைதளங்களில் பல நேரங்களில் தவறான விஷயங்கள், எதிர்மறையான கருத்துகள் வரலாம். ஆனால் அவற்றையெல்லாம் நாம் பொருட்படுத்தக் கூடாது. விஜய் அண்ணா எப்போதும் சொல்வதைப் போல, எதிர்மறையான விஷயங்களை உதாசீனப்படுத்திவிட்டு, நம்முடைய இலக்கை நோக்கி தொடர்ந்து முன்னேற வேண்டும். நம்முடைய வாழ்க்கை நம்மைச் செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்லும். அதனால் யார் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல், நம்முடைய பயணத்தில் கவனம் செலுத்த வேண்டும்”, என்றார்.
இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற லிஜோமோல் ஜோஸ் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். செல்வகுமார் SK ஒளிப்பதிவு செய்ய, ஆர். கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். டி. முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அஷ்வின் முருகன் இணை தயாரிப்பாளராக உள்ளார்.
முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து ‘பத்தா’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள ‘பத்தா’ திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இசை வெளியீட்டு விழாவில் திரண்ட ரசிகர்களின் உற்சாகமும், படக்குழுவினர் பகிர்ந்துகொண்ட தகவல்களும், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்தன.
