நாங்குநேரி கொடூரம்!

நாங்குநேரி கொடூரம்! பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்திக்கும் நீதிபதி சந்துரு.. ஆய்வு நடத்தவும் திட்டம்

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

திருநெல்வேலி: நாங்குநேரியில் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த மாணவரை வேறு சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.

நாடு விடுதலை அடைந்த 76வது ஆண்டை கொண்டாட நாம் தயாராக்கிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னமும் தீண்டாமை கொடுமை அகற்றப்படவில்லை எனும் உண்மையை நாங்குநேரி சம்பவம் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது என சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெரு பகுதியை சேர்ந்த அம்பிகா-முனியாண்டி தம்பதியினரின் மகனான சின்னதுரைதான் இந்த முறை சாதிய வன்கொடுமைக்கு ஆளான சிறுவன்.

வள்ளியூர் கண்கார்டியா பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த இச்சிறுவனுடன் மற்ற சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும் படித்து வந்திருக்கிறார்கள். இந்த இதர சமூகத்தை சேர்ந்த மாணவர்கள், பெருந்தெரு மாணவர்களிடம் தங்களது புத்தகப் பைகளை சுமக்க வைப்பதும், அவர்களிடம் இருக்கும் பணத்தை பிடுங்கிக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. சில நேரங்களில் ஓட்டல்களில் சாப்பிட்டுவிட்டு தலித் சமூத்தை சேர்ந்த மாணவர்களை பணம் கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது. இது போன்ற பல சம்பவங்களை எதிர்கொண்டதன் காரணமாகதான் சின்னதுரை பள்ளி செல்வதை நிறுத்தியிருக்கிறார். மகன் நீண்ட நாட்களாக பள்ளிக்கு போகாமல் இருப்பது குறித்து பெற்றோர் விசாரிக்கையில் உண்மைகள் வெளிவந்துள்ளன. பின்னர் அவர்கள் தலைமையாசிரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களை தலைமையாசிரியர் அழைத்து கண்டித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் அன்று இரவு சின்னதுரையின் வீடு புகுந்து வேறு சமூகத்தை சேர்ந்த சிறார்கள் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் சின்னதுரை, அவரது சகோதரி படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தின் போது குறுக்கே வந்த இவர்களது தாத்தாவை சிறார்கள் தள்ளி விட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சிகள் பல இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் நாங்குநேரி சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து கருத்துக்கள் கேட்கப்படும் என்று சந்துரு கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரை படித்த பள்ளி, வீடு, சம்பவம் நடைபெற்ற இடம் என அவர் தொடர்புடைய இடங்களுக்கு சென்று ஆய்வும் நடத்தப்படும் என்று நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பி.எஸ்.சுவாமிநாதன் செட்டியார் ஒரு சகாப்தம்! – முப்பெரும் விழா
Next post BJP யை இதைவிட யாராலும் கேவலமா திட்ட முடியாது கரு பழனியப்பன் தாறுமாறு தக்காளி சோறு karu Pazhaniappan
Close
%d bloggers like this: